Tuesday, 6 January 2015

புலிப்பாணி 11 - 21 பாடல்கள்

பாடல் 11 - முதற் பாவம்


சீர்மலிமுதற்பாகத்தின் பலன் றான்
சித்தி தங்கிலேச மெய்சொரூபம்
பேர் மலிவயதும் பகர்தனுத்தானம்
பெருநிதிகீர்த்தி மூர்த்திகளும்
ஏர்மலிசு பந்தோஷநிறமும்
மிலக்கணமுபாங்கமே முதலாம்
தார்மலிபோகர் தாளிணைவணங்கிச்
சாற்றினே புலிப்பாணிதானே

பெருமைக்குரிய மாலையணிந்த என் குருநாதர் போகமுனிவரின் தாளிணை பணிந்து முதற் பாவகத்தின் மூலம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிய பெயர்களைக் கூறுவேன் கேட்பீராக, ஒரு ஜாதகனின் வடிவத்தையும் அறிவு நலனையும், வயதையும், தன சம்பந்தமான விஷயங்களையும், கிடைக்கும் பெருநிதியையும். புகழையும்,அடையும் பேறுகளையும், ஏற்படக்கூடிய இன்பங்களையும், நிறத்தையும் குண விசேடங்களையும் நன்கு கூறலாம். [எ-று]

இப்பாடலில் முதற் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 12 - இரண்டாம் பாவம்


தானமிகு ரெண்டிடத்தின் பெயரைக்கேளு
தனம்குடும்ப மொளிசெறிநேத் திரமும் வித்தை
ஈனமிலாச் செல்வமுடன் சாஸ்திரவாக்கு
இரும்பொன்னும் முபதேச மியம்புகேள்வி
மானமிகு சவுபாக்கியங் கமனம் புத்தி
மற்றுமுள்ள நவரெத்தின வகையின் பேதம்
ஊனமிலா யிவை பார்த்து முணர்ந்துமென்று
உரைத்திட்டேன் புலிப்பாணி உறுதியாமே.

சிறப்பு மிகுந்த இரண்டாம் பாவகத்தால் அடையும் பலன்களின் பெயர்களாவன: இத்தானம் தனஸ்தானம் என்றும் குடும்பஸ்தானம் என்றும் ஒளிமிகுந்த நேத்திர ஸ்தானம் என்றும் கல்வி மற்றும் வித்தை ஸ்தானம் என்றும் கல்வி மற்றும் வித்தை ஸ்தானம் என்றும் மற்றும் செல்வம், சாத்திர அறிவு, வாக்கு, சிறப்புமிகு பொன் சேர்க்கை, உபதேசம், கேள்வி, மற்றும் சுக ஸ்தானம் என்றும் , மனம் , புத்தி மற்றும் நவமணிகளின் குற்றங்களையும் குறைகளையும் அறிந்துரைக்கும் குற்றமில்லாத தானமென்றும் உறுதியாகப் புலிப்பாணி உரைத்தேன் [எ-று]

இப்பாடலில் இரண்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 13 - மூன்றாம் பாவம்


ஆனமூன்றா மிடத்தினரும்பலன்
மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும்
தானயோகந் தயிரியஞ்சோதரர்
ஈனவேலை இருங்கலன் வீரமே.



மூன்றாம் இடத்தின் பலன்களாவன;
மானவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம். (எ-று)

இப்பாடலில் மூன்றாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். 

பாடல் 14 - நான்காம், 

ஐந்தாம் பாவம்


வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்
மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்
பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்
வித்தை புத்திபுத்திரர் செல்வமே


நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம்.
பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம். (எ-று)

இப்பாடலில் நான்காவது, ஐந்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். 

பாடல் 15 - ஆறாம் பாவம்


ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா
ஆயுதத்தால் ரணஞ்சொல்லு ஞாதிதுன்பம்
வீரான யுத்தமொடு திரவியநஷ்டம்
மிகுதிருடர் ஜலமடந்தை விளையுஞ்சோர்வும்
கூறான மெய்வாதை பெண்ணால்கண்டம்
கூடுமேபெரும்பாலும் நோயுமென்று
பேரான சிறைச்சாலை கிட்டுமென்று
பேசினேன் புலிப்பாணி பிரியத்தோட



ஆறாம் இடத்தினால் அரியத் தரும் பலன்களாவன:
ஆயுதத்தால் ஏற்படும் அபாயம், தாயாதிகளால் ஏற்படும் துன்பம், யுத்தபயம், திரவிய நஷ்டம், திருடர்களால் ஏற்படும் தொல்லை, ஜலகண்டம், பெண்களால் ஏற்படும் துன்பங்கள், செய்வினைகளால் சோர்வுறுதல், உடலுபாதை, பெண்ணால் ஏற்படும் கண்டம் நோய்கள் மற்றும் சிறை வயப்படும் தொல்லைகள் ஏற்படுமென் பிரியமாக புலிப்பாணி குருவருளாலே கூறினேன். (எ-று)

இப்பாடலில் ஆறாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். 
 பாடல் 16 - ஏழாம் பாவம் 


சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும்
தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம்
சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார்
அபிமானமரசரது சேர்சன்மானம்
தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய்
சதிருடனே தான் வந்து சேருமென்று
கொத்தாக நீயறிந்து கூறுவாயேல்
குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.


சப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்மென்று ஆராந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது. [எ-று]

இப்பாடலில் ஏழாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 17 - எட்டாம் பாவம்


அஷ்டமயோக மரும்பிணி சண்டையும்
நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும்
துஷ்டடம்பமும் துன்றுமலையேறி
கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே


அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.

இப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். 
 

பாடல் 18 - ஒன்பதாம் பாவம்



ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும் பணிகூபமும்
வன்வதான பரியும் வளப்பமும்
தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்




ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: 
ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]

இப்பாடலில் ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 19 - பத்தாம் பாவம்


பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு
பட்டணங்கள் தாபித்தல் பலங்களோடு
வித்தான பலபுண்ணியந் தேசாபிமானம்
வீறான அரசனொடு கருமம் ஞானம்
சித்தமதி லிரக்கமிகு தெய்வபக்தி
சேருகின் றசவுரியமுங் கொப்பமூணும்
நத்துகின்ற பூசையோடு மனைவிசேர்க்கை
நலமாக விப்பலனை நவிலுவாயே.


பத்தாம் பாவகத்தின் பலன்களாவன: 
பட்டினங்கள் ஸ்தாபித்தலும், நல்லூழோடு பல புண்ணியம் செய்தலும் தேசாபிமானமும், அரசரோடு இணக்கமுறுதலும் நற்கருமம் ஞானம் முதலிய வாய்த்தலும், மனத்தில் இரக்க உணவு இழையோடுதலும் மிகுந்த தெய்வ பக்தியும் சிறந்த செளகரியமும் கருப்பம் வாய்த்தலும் நல்ல உணவு வாய்த்தலும் வெகுவான பூசைகளைச் செய்வதோடு துணைவி சேர்க்கையும் நலமாகக் குறித்தறிந்து கூறுவாய். [எ-று]

இப்பாடலில் பத்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

பாடல் 20 - பதினோராம் பாவம்


பத்தின்மேலொன்றாகும் பலனைநன்றாய்
பகருகிறேன் பயிர் வளப்பம் பரிநல்வேழம்
வித்தைமிகு லாபங்கல் லறிவுசேர்க்கை
மிகுமனதிற்றூக்கமொடு சிவிகைசேரும்
உத்தரியஞ் செறிந்தபசும் பொன்னையொத்த
உயர்மனைவி யோகமது முதலாயுள்ள
மெத்தவே நீயறிந்து விளம்புவாயேல்
வேதமா யுன்வார்த்தை விரும்புவாரே

பதினோராம் இடத்தின் பலன்களாவன
:
 விவசாய அபிவிருத்தி ஏற்படுதலும், பரியொடு யானை முதலியன வாய்த்தலும் (வாகனங்கள் அமைதலும்) நல்ல வித்தைகள் வாய்த்தலும், மிகுந்த இலாபங்கள் வாய்த்தலும், நல்ல அறிவுடையோர் தொடர்பு வாய்த்தலும், மனத்தில் ஊக்கமும் சிவிகை சேர்தலும், உத்தரியம் மகரகண்டிகை வாய்த்தலும், நன்மனைவி யோகமும் இது போன்ற நன்மையானவை யெல்லாம் நன்கு ஆராய்ந்து குறித்துக்கூற உன்றன் வார்த்தைகளை வேதமாய், எண்ணிக் கொண்டாடுவார்கள். [எ-று]

இப்பாடலில் பதினோராம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
 

பாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்


பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு
பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு
சத்தான பலியோக சயனம் தியாகம்
தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக
வித்தான பலபுண்ணிய விவாதமோடு
விளைந்திடுமே தொழிலான பலதானங்கள்
கத்தாதே போகருட கருணையாலே
கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.


பன்னிரண்டாம் பாவகத்தின் பலன்களாவன
பிறதேச செளக்கியம், உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பலயோகங்கள் வாய்த்தலும் சயன சுகம், தியாகம், தர்மம் ஆகியவற்றோடு கர்மபலனும் மற்றும் சுகமடைதலும், பல புண்ணிய சம்பந்தமும் விவாதத்தில் வல்லமையும் ஏற்படக் கூடிய தொழில்களும் பற்பல தானங்களும் வாய்த்தலை உணர்ந்து கூறினால் நன்மை பயக்கும் எனக் குருவருள் கொண்டு புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் பன்னிரண்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
 

No comments:

Post a Comment